மலேசியாவிற்கு பறக்கவுள்ளார் ரணில்
மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீம் உடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக இதன் போது அன்வர் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் மாநாடு
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை கைசாத்திடுவது தொடர்பிலும் அவர் சாதகமான பதில் வழங்கியுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் மாநாட்டில் மலேசிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பார் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இணைய இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இரு தரப்பினருக்கிடையிலான சந்திப்பின் போது மலேசிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லான்டை ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.