சிறிலங்காவை ஆட்சி செய்வது அரிசி ஆலை உரிமையாளர்களா? நாடாளுமன்றத்தில் பகிரங்க கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக சாட்சி இருந்தால், வழக்கு தொடருமாறும், சாட்சியம் இல்லை என்றால், விடுதலை செய்யுமாறும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பான பிரச்சினை என்பதால், இது குறித்து சரியாக செயற்படவில்லை எனில், அடுத்த முறை சிறப்புரிமைகள் இல்லாமல் போகும் ஆபத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு சம்பவம் சம்பந்தமாக பிரதி காவல்துறைமா அதிபர்கள் மற்றும் காவல்துறை அத்தியட்சகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரதி காவல்துறைமா அதிபர்கள் மற்றும் காவல்துறை அத்தியட்சகர்கள் அனைத்தையும் நன்றாகவே செய்தனர். அவர்கள் தமது பொறுப்பை தவறவிட்டனர் என்று கூற முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி கருத்து வெளியிடும் போதே முன்னாள் பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டை ஆட்சி செய்வது அரிசி ஆலை உரிமையாளர் சங்கமா அல்லது அமைச்சரைவயா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் வெளியிடும் கருத்துக்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை யார் ஆட்சி செய்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.