பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: பந்துல புகழாரம்
2022 இல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினால் இலங்கையின் பொருளாதாரம் இன்று சாதகமான நிலையை எட்டியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன் தற்போது தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படுகிறது, எரிவாயு வரிசைகள் இல்லை, தடையற்ற மின் விநியோகம், அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்கப்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
வரி விதிப்பு
இது தொடர்பில் இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
“2023 ஆம் ஆண்டு வரி விதிப்பின் மூலம் பெறப்பட்ட அரச வருமானம் 3201 பில்லியன் ரூபாவாகும். நிவாரணங்கள், சம்பளம் மற்றும் அரச கடன்கள் ஆகியவற்றிற்காக திறைசேரியிலிருந்து செலவிடப்பட்ட தொகை 4394 பில்லியன் ரூபாவாகும்.
அரச செலவில் எப்பகுதி குறைக்கப்படும் என்பதை மாற்றுக் கருத்துள்ள குழுக்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகள் இல்லை என அதிபர் தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டார்.
2022 இல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி மக்களுக்குத் தெரியும். அதிலிருந்து நாட்டை மீட்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினால் இலங்கையின் பொருளாதாரம் இன்று சாதகமான நிலையை எட்டியுள்ளது.
திறைசேரிக்குக் கிடைத்த வருமானம்
கடந்த ஆண்டு தொடர்பில் குறிப்பிடுவதாயின், வரிப் பணம் உட்பட மொத்த அரச வருமானம் 3201 பில்லியன் ரூபாவாகும். அதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் 1550 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கத்தினால் 923 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்தினால் 169 பில்லியன் ரூபாவும், மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் 20 பில்லியன் ரூபாவும் பங்களிப்புச் செய்துள்ளன.
இந்தத் தொகை திறைசேரிக்குக் கிடைத்த வருமானம் ஆகும். ஆனால் கடந்த வருடம் திறைசேரியால் செலவிடப்பட்ட பணத்தின் அளவு 4394 பில்லியன் ரூபாவாகும். நிவாரணங்கள், அரச கடன்கள், அரச ஊழியர்களுக்கான சம்பளம் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், திறைசேரியில் இருந்து 13,292 பில்லியன் ரூபா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படுகிறது. எரிவாயு வரிசைகள் இல்லை. தடையற்ற மின் விநியோகம் இருக்கிறது. அரச ஊழியர்களுக்கு குறித்த திகதியில் சம்பளம் வழங்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் சம்பளம்
இந்த செயற்பாடுகள் மூலம் அதிபரினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு மாற்றாக வேறுவழி எதுவும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அதிகாரத்தைப் பெறுவதற்காக மேடைகளில் சில குழுக்கள் பல்வேறு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டாலும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு என்ன வேலைத் திட்டத்தை மேற்கொள்வோம் என்பதை அந்தக் குழுக்கள் மக்களுக்குக் கூற சொல்ல வேண்டும்.
நிவாரணப் பகுதியை குறைக்கிறார்களா? இல்லை என்றால் அரச கடன் பகுதியை குறைக்கிறார்களா? அல்லது அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்கிறார்களா? என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆட்சியில் பங்கேற்ற காலம் மிகக் குறைவு.
சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம்
அப்போது, தாங்கள் வெற்றி பெற்ற திஸ்ஸமஹாராம பிரதேச சபையை உரிய முறையில் நிர்வகிக்க முடியாததால் மீண்டும் அடுத்த அரசியல் குழுவுக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தீர்மானித்தனர்.
2003ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அந்த சட்டமூலத்தில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக வைத்திருப்பது மற்றும் அரச கடனை 60% ஆக பேணுவது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால், பின்னர் வந்த அரசாங்கங்களால் அதைச் செயற்படுத்த முடியவில்லை. இதனால், 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால் அதிபர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார்” என்று அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |