அதிபர் ரணில் தலைமையில் ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 'நிஜம்' எனும் தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
குருணாகல், குளியாப்பிட்டிய நகரசபை மைதானத்தில் இன்று (10) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதன் பின்னர் பங்கேற்கவுள்ள முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இதுவாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கூட்டங்கள் ஏற்பாடு
இதேவேளை அதிபர் ரணில் விக்ரமசிங்க இதுவரையிலும் கட்சி சார்பற்ற அரச தலைவராக செயற்பட்டு வருகின்றார் எனவும் எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் அதிபருக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த மக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அகிலவிராஜ் மேலும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கட்சி சார்பற்ற வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக இனிவரும் காலங்களில் வெவ்வேறு தரப்பினரால் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அகிலவிராஜ் சுட்டிக்காட்டு
இறுதியில் இவ்வனைத்து தரப்பினரும் இணைந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வோம் என்றும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.
குளியாப்பிட்டியவில் இடம்பெறவுள்ள 'நிஜம்' என்ற தொனிப்பொருளிலான மக்கள் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |