அரசியல் சதி திட்டங்களுக்கு ஏமாற மாட்டேன்: சஜித் பிரேமதாச பகிரங்கம்!
நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பல இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்ற நிலையில், அவை அனைத்தும் ஒன்றிணைந்து தமக்கெதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை (Ampara) மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "எமக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை. அத்தோடு இந்த ஆண்டு இறுதியில் பொது மக்கள் யுகம் உருவாகும். அத்தோடு எம்மைப் பற்றி சிந்தித்து அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
எமக்கெதிராக சதித்திட்டம்
மொட்டு, யானை மற்றும் திசைக்காட்சி என அனைவரும் எம்மைக் கண்டு அஞ்சுவதால் அவர்கள் அனைவரும் இணைந்து எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.
எந்தவொரு சதித்திட்டத்தாலும் 220 இலட்சம் மக்களை ஏமாற்ற முடியாது. அத்தோடு அதிகாரம் எதுவுமின்றி பல சேவைகளை நாட்டுக்கு செய்யும் ஒரேயொரு எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே.
அதே போன்று தற்போது வழங்கும் சகல வாக்குறுதிகளையும் எமது ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்வதுடன் விவசாயிகளின் பயிர்செய்கைக்கான ஸ்திர விலை நிர்ணயிக்கப்படும்.
ஓய்வூதிய முறைமை
அதேபோன்று விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையையும் நாம் மறக்கவில்லை. அத்தோடு இந்த ஆண்டு இறுதிக்குள் விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையை நடைமுறைப்படுத்துவோம்.
யானை மற்றும் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுவதுடன் விவசாயிகளின் விவசாய நிலத்துக்கான உரிமம் வழங்கப்படும்.
சஜித் பிரேமதாச எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிய மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தோடு அதேபோன்று வர்த்தக நிறுவனங்களால் என்னை விலைக்கு வாங்கவும் முடியாது.
எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவோம்" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |