பொருளாதாரத்தை முன்னேற்ற ரணில் வகுத்துள்ள திட்டம்
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அதிபரால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியின் ஊடாக எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளை குறைத்து, மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும், இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
புதிய சட்ட விதிகள்
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார். தனியார் துறையினரின் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்படும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை பலப்படுத்த வேண்டும். வாகனங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாம் இருந்த நிலை பற்றிய நினைவு இன்றி, இந்தப் பணிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது ஒரு துரதிஷ்டவசமான நிலையாகும்.
பலவீனமான இடங்களை ஸ்திரப்படுத்தவே நாம் புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்துகின்றோம்.
அரச பொறிமுறை
அவற்றை நாம் சட்டப்படி நடைமுறைப்படுத்த வேண்யுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரமே நாம் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்படி செயற்பட்டே நாம் இந்தப் பிரச்சினைகளை, இந்த அளவுக்குத் தீர்த்துள்ளோம்.
எனவே முழு அரச பொறிமுறையின் அனைவரும் மிகவும் அவதானமாக, எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை வேண்டியுள்ள அரச பொறிமுறையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது” - என்றார்.