காலநிலை மாற்ற மாநாட்டிற்காக ரணில் விக்ரமசிங்க இன்று டுபாய் விஜயம்
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) டுபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று (30) முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை டுபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் அரச தலைவர்கள், பொது தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
காலநிலை மாற்ற மாநாடு
பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளரும் நாடுகளுக்கான காலநிலை நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட 03 முன்மொழிவுகளை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருட மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மூவரும், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதேவேளை 20 இளைஞர் பிரதிநிதிகள், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் ஊடகங்களின் குழுவும் ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |