13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான சிறந்த புரிந்துணர்வு அதிபருக்கு உண்டு: சந்திரிக்கா பண்டாரநாயக்க
இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் தொடர்பான சிறந்த புரிந்துணர்வு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தலைவர்கள் கோரினாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமென மற்றுமொரு தரப்பினர் தொடர்ந்தும் கூறுகிறார்கள்.
முழு ஆதரவு
இந்த நிலையில், குறித்த சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது எனும் கேள்வியை எழுப்ப தாம் விரும்புவதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த உதவுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தம்மிடம் கோரியதாகவும் அதற்கான முழு ஆதரவை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அனைத்து மாகாண சபைகளும் தற்போது செயலிழந்துள்ள நிலையில், அதனை யார் நடைமுறைப்படுத்துவது எனும் கேள்வி எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வடக்கு, கிழக்கில் குறைந்தது மாகாண சபைகளாவது இருக்க வேண்டும் எனவும் அதற்கு முதலில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு சட்டம்
தமது ஆட்சிக் காலத்தின் போது, படிப்படியாக தாம் செய்ய முற்பட்டவை சரியானது என்பதை தற்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தாம் புதிய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்ததாகவும் அதனை முழு உலகமும் வரவேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற 7 வாக்குகள் போதாமல் போன காரணத்தால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் பிரதானி என்ற வகையில் அதிபரும் அரசாங்கத்தின் ஏனைய அங்கத்தவர்களும், இதனை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பிரிவுகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அது சரியாக நடைமுறைப்படுத்தபடுகிறதா என்பது அவதானிக்கப்பட வேண்டுமெனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளார்.