சிறையில் ரஞ்சனுக்கு ஏற்பட்டுள்ள நிலை -வெளிவரும் தகவல்கள்
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஏனைய கைதிகள் சிறந்த வரவேற்பை வழங்கி வருவதாக கொழும்பு ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பல்லன்சேன சிறைச்சாலையிலிருந்து, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்க, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, இதுவரை கைதிகளுக்கான இலக்கம் கிடைக்கவில்லை. தனி சிறைக்கூடமொன்றில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
எனினும், ஏனைய சிறைக் கூடங்களில் மூன்று கைதிகள் விகிதம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் என 1100 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வெளியிலிருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், மாதத்திற்கு ஒரு முறை மாத்திரமே உறவினர்களுக்கு அவரை சந்திக்க முடியும் எனவும் அறிய முடிகின்றது.
எனினும், கடந்த சில தினங்களாக ஏனைய கைதிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனி சிறைக் கூடத்திலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தலையணை, பாய் மற்றும் போர்வை ஆகியன கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெத்தையை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை முன்வைக்க ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இயலுமை காணப்படுகின்ற போதிலும், அவர் இதுவரை மெத்தையை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை விடுக்கவில்லை என அறிய முடிகின்றது.
உடற்பயிற்சிகளை செய்வதற்கும், நாளாந்த பத்திரிகைகளை வாசிப்பதற்கும் அவர் நேரத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.