பறிக்கப்பட்டது ரஞ்சனின் பதவி- நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதிரடி அறிவிப்பு!
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரசியலமைப்பின் பிரிவு 66 (d) யின் படி, கம்பஹா தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் ஒரு வெற்றிடம் உள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர், நாடாமன்றத் தேர்தல் சட்டத்தின்படி ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை இரத்து செய்வதாக நாடாளுமன்ற பொது செயலாளர் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் குறித்த ரீட் மனுவை கடந்த 5ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.