சத்தியக் கடதாசியை சமர்ப்பித்தார் ரஞ்சன் ராமநாயக்க! விடுதலையாகும் திகதி குறித்து வெளியான தகவல்
நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்.
2017 ஓகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து, நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைத்து விட்டது எனத் தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மன்னிப்பு கோரிய ரஞ்சன் ராமநாயக்க
இந்நிலையில் இன்று அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அலரிமாளிகைக்கு வெளியில் தாம் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது, இழிவானது மட்டுமன்றி ஒட்டுமொத்த நீதித்துறையையும் அவமதிக்கும் வகையிலானது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அது தொடர்பில் முழு நீதித்துறையிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2017 ஆகஸ்ட் 21ஆம் திகதி தாம் வெளியிட்ட கருத்தை, மீளப் பெறப் போவதில்லை எனக் கூறி, உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூறிய கருத்திற்கும் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அத்துடன், தனது வாழ்நாளில், ஒட்டுமொத்த நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அல்லது இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் சத்தியக் கடதாசியில் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலையாகும் திகதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கள் கிழமை விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தான் மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பலமான கோரிக்கைக்கு அமைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, இதனை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஓய்வில்லாமல் உழைத்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Expecting dear brother @RamanayakeR to be released tomorrow (26) or Monday (29) on the request that @nanayakkara77 and I made along with many others to HE President @RW_UNP, I would like to thank @wijerajapakshe who worked tirelessly to make it happen. ecstatic about his release pic.twitter.com/9uPNmtdJFh
— Harin Fernando (@fernandoharin) August 25, 2022
ரஞ்சன் ராமநாயக்கவை அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு எடுத்திருந்தது. இதனடிப்படையில், நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரும் சத்தியக் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களில் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 13 ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தார்.
அத்துடன் விடுதலைக்கு தேவையான ஆவணங்களை நீதியமைச்சு, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியிருந்தது.
அந்த ஆவணங்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்ட பின்னர், ரஞ்சன் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.