ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவிற்கு (Ravi Karunanayake) எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சின் விசேட திட்டமொன்றிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மூன்று ஊழியர்களுக்குத் தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் (National Lotteries Board) நிதியைப் பயன்படுத்திச் சம்பளம் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
கொழும்பு மேலதிக நீதவான் லியான்வர்ஷ விதான முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) சார்பில் எவ்வித பிரதிநிதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனைக் கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், அடுத்த வழக்கு விசாரணைத் திகதிக்கு முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் (Notice) அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
இக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரவி கருணாநாயக்க, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் முன்னாள் தலைவி ஷாமிலா பெரேரா இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன் அவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

முதலாவது சந்தேகநபரான ஷாமிலா பெரேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இரண்டாவது சந்தேகநபரான ரவி கருணாநாயக்க சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அசோக வீரசூரியவுடன் இணைந்து சட்டத்தரணிகளான சஞ்சய மரபே மற்றும் பசான் கருணாரத்ன ஆகியோரும் மன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |