இராணுவத்தைக் கொண்டு எம்மை அடக்க முடியாது! ரவிகரன் சூளுரை
சுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயாமல், இராணுவத்தை பதில் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மக்களின் அறவழிப் போராட்டத்தினை மதிக்காமல், படைத்துறையின் வலு கொண்டு எதிர்கொள்ளும் போக்கை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. சுகாதார சிற்றூழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பிலே, அந்த சிற்றூழியர்களின் கருத்துக்களை கேட்காமல் உடனடியாகவே சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினை அந்த பணிகளுக்காக ஈடுபடுத்துவதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
நிச்சயமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார சிற்றூழியர்களின் கோரிக்கை என்ன என்பதை உரியவர்கள் உடனடியாக கேட்டிருக்கவேண்டும். அவ்வாறு அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு, அவர்ளுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அதுவே முறையான செயற்பாடாகும்.
அந்தச் சிற்றூழியர்களின் கோரிக்கை என்ன? நான் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய வகையில், ஏற்கனவே யுத்த காலப்பகுதியில் தங்களுடன் பணியாற்றிய பலரும், வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற கருத்தினைச் சொல்லியிருக்கின்றனர். அக்கருத்து உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.
தற்போது ஒருலட்சம் வேலைவாய்ப்பினூடாக சிற்றூழியர்களுக்கு வழங்கப்படும் நியமனங்கள், ஒவ்வொரு அமைச்சர்கள் ஊடாகவும், அல்லது அரசாங்கத்தின் சார்பாளர்களூடாகவும் அந்த வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினதும், அரசாங்கத்தை சார்ந்துள்ளோரினதும் இத்தகைய செயற்பாட்டை அந்த சிற்றூழியர்கள் எதிர்க்கின்றனர்.
இவ்வாறாக சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்களுக்கு பதிலாக இராணுவத்தினர் அங்கு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு சேவைகளைப் பெறுவதற்காக செல்லும் மக்கள் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டிருப்பதை பார்த்ததும், பயத்தின் காரணமாக வைத்திய சேவைகளைப் பெறாது பலர் திரும்பிசெல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.