உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 24 குற்றவாளிகள் தொடர்பிலான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு நிறைவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்(2019 ) தொடர்பாக நௌஃபர் மவ்லவி மற்றும் 23 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் வாசிப்பு வெள்ளிக்கிழமை (11) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையிலும், பிரதிவாதிகள் முன்னிலையிலும் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

நௌபர் மவ்லவி, சஜித் மவ்லவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆடம் லெப்பே, மொஹமட் சனஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக, 2019 பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியமை, ஊக்குவித்தல் மற்றும் சதி செய்தல் உட்பட 23,270 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்கும்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒக்டோபர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி காவல்துறைமா அதிபர் பி. அம்பாவிலவுக்கு அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.