காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடி நடவடிக்கை- மக்கள் பிரச்சினையில் அசமந்தம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாது அதிகரித்துச் செல்வதற்கு காவல்துறையின் அசமந்த நடவடிக்கையே காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் கல்லாறு பகுதியில் காவல்துறை அதிகாரிகள் இருவர் வாள் வெட்டுக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து இராணுவம், விசேட அதிரடிப்படையினர், காவல்துறை ஆகியோர் கிராமத்தைச் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
ஆனால் இதுபோன்று பொது மக்களுக்கு இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள பொது மக்கள். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் வலுவான ஆதாரங்களுடன் காவல்துறையினருக்கு தகவல் வழங்குகின்ற போதும் அவை தொடர்பில் மென்போக்காக நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில் குற்றச் செயல்களில் ஈடுப்படுகின்றவர்கள் கைது செய்யப்படுகின்ற போதும் நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படுகின்ற போது அவர்களுக்கு எதிராக காவல்துறை மென்போக்காக நடந்துகொள்வதனால் குற்றச் செயல்களில் ஈடுப்படுகின்றவர்கள் சுந்திரமாக வெளியே சென்று வழமையான குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டுக் குழுக்கள், சட்டவிரோத மணல் அகழ்வு, கஞ்சா, கசிப்பு என சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றவர்கள் தொடர்பில் காவல்துறைக்கு போதுமான தகவல்கள் தெரிந்தும் அவர்கள் தொடர்பில் மிகவும் மென்போக்காக அல்லது அசமந்த போக்கில் நடந்து கொள்வதால் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கிறது என்றும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்கள்,
உயரதிகாரிகள் அனைவரும் கவனம் செலுத்தி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை
பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரியுள்ளனர்.