வெளிநாடுகளில் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த குற்றவாளிகள் : பாதுகாப்பு பிரதி அமைச்சர் பகிரங்கம்
வெளிநாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் கடந்த காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களுடனான சந்திப்பு களுத்துறையில் நேற்று (23) நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், "நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அனைத்தும், சாட்சிகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் என்றே கருதத் தோன்றுகின்றது.
இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பெரும் குற்றவாளிகள் கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அந்த நாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் அங்கு சென்று அவர்களுடன் அந்தச் சுகபோகங்களைப் பகிர்ந்துகொண்டே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
இவற்றை எப்போதாவது தொலைக்காட்சிகளில் கண்டதுண்டா, அல்லது இது குறித்து யாராவது ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தினார்களா? நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாகவே தற்போது எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.
பொருளாதார ரீதியாக முன்னேற்றம்
நமது நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. ஏதோவொரு அரசியல் குழுவை அல்ல, பல குழுக்களையே மக்கள் விரட்டியடித்தனர். அத்துடன் அவர்கள் மிகவும் கொடூரமான திட்டமிட்ட குற்றக் கும்பல் என்று கூறினால் அது மிகையாகாது.

பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்த நாடொன்றைப் பொறுப்பேற்று, நிதி ஒழுக்கத்துடன் நாம் முன்னோக்கிச் செல்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நிதியைச் சரியாகத் திரட்டி, பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளோம்.
கடந்த 15 மாதங்களுக்குள் நாம் பொருளாதார ரீதியாகப் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுடன், உயர் பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening