வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்த தாழ்வு நிலை இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும் வாய்ப்புள்ளது எனவும் கூறியள்ளார்.
இதனால் இன்றும் இலங்கையின் வடக்கு மேற்கு, வட மேற்கு, மத்திய, வட மத்திய கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
வெள்ள அனர்த்தம்
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதனால் இம்மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படக்கூடும். நாளைய தினமும்(15.05.2026) வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணம் பரவலாக கனமான மழை யைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முல்லைத்தீவு,வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் நாளை கன மழை கிடைக்கும்.
சிவப்பு எச்சரிக்கை
எதிர்வரும் 16.05.2026 அன்றும் மேற்கு,வட மேற்கு ,வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் ” என தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பல பகுதிகளுக்குக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (14-05-2026) காலை 9.30 மணிக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை அறிக்கை
இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை (15-05-2026) காலை 8.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி அறிக்கையின்படி, இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து நீடித்து வருவதாகவும் அடுத்த 36 மணித்தியாலங்களில் தீவிலிருந்து விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |