மன்னாரில் அனுமதியின்றி இயங்கிய விடுதிக்கு சிவப்பு அறிவித்தல்
மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கி வந்த தனியார் விடுதி ஒன்றுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (9) மன்னார் நகர சபையினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையிலான குழுவினர் விடுதிக்குச் சென்று பார்வையிட்டனர். இதன் போது எவ்வித அனுமதியும் இன்றி குறித்த விடுதி அமைக்கப்பட்டு இயங்கி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் அறிவிப்பு
அனுமதியற்ற கட்டிடம் தொடர்பில் உரிய ஆவணங்களை எதிர்வரும் 14 தினங்களுக்குள் மன்னார் நகர சபையில் சமர்ப்பிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தினத்திற்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் கட்டிடம் அனுமதியற்ற கட்டிடம் என கருதி நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திற்கு அமைவாக வும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த கட்டிடம் இடித்து அகற்றப்படும் என மன்னார் நகர சபை அறிவித்துள்ளது.
சிவப்பு அறிவித்தல் விடுதியின் நுழை வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை பிரிவில் பல்வேறு தனியார் விடுதிகள்
இதேவேளை மன்னார் நகர சபை பிரிவில் பல்வேறு தனியார் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள போதும் எவ்வித கண்காணிப்புகளும் இன்றி காணப்படுவதனால் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனவே மன்னார் நகர சபை பிரிவில் உள்ள தனியார் விடுதிகள் தொடர்பில் மன்னார் நகர சபை துரித கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
