உடன் விடுதலை செய்க -இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்து
ஸ்ரீலங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய விடயத்தை வன்மையாக கண்டிப்பதாக உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கவாதிகள் மற்றும் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் தென்னிலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களின் போது தொழிற்சங்கவாதிகள் உட்பட போராட்டக்காரர்களைத் கைது செய்ததோடு, கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய விடயத்தையும் கண்டிப்பதாக உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தின் ஊடாக கல்வி தனியார் மயமாக்கப்படுவதாக தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதான அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதாகவும், ஜூலை 14ஆம் திகதி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக போராடும் தொழிற்சங்கவாதிகள் மற்றும் ஆர்வலர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச வர்க்க அடிப்படையிலான தொழிற்சங்க இயக்கங்கள் இலங்கையில் உள்ள தொழிற்சங்க இயக்கங்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக மற்றும் தொழிற்சங்க உரிமைகளை மீறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ள, உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளர்களை உடனடியாகவும் நிபந்தனையுமின்றியும் விடுவிக்க வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு உரத்தைப் பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.