சஷீந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு டி சில்வா இன்று (19) உத்தரவிட்டார்.
சந்தேகநபர் இன்று (19) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவு 22 ஆம் திகதி தலைமை நீதவான் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான செவனகல பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டிடம், சொத்துக்கள் உட்பட, முந்தைய போராட்டத்தின் போது சேதமடைந்ததாகவும், சேதமடைந்த அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, சொத்துக்காக 88,50,000 ரூபாய் இழப்பீடு பெற்றதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
