டேன் பிரியசாத் கொலை வழக்கில் திருப்பம் - சிக்கிய துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர்
அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் கொலை தொடர்பில் துப்பாக்கித்தாரியாக செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை ரங்வல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதை கேகாலை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, 12, 400 சட்டவிரோத சிகரெட்டுகள், 5 கஜமுத்துகள் மற்றும் போதை மருந்துகளுடன் ரங்வல பிரதேசத்தின் வாடகை வீடொன்றில் வைத்து இரு ஆண்கள் மற்றும் பெண்ணொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி தேசிய அடையாள அட்டை
சந்தேகநபர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதுடன் அவர்களிடமிருந்து போலியாக தயார் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றி முறையாக ஓய்வு பெறாதவர் எனவும் அவர் அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கித்தாரியாக செயற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணையில் வெளியான தகவல்
இதேவேளை, குறித்த சந்தேகநபர் மஹபாகே காவல்துறை பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் எனவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
