தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் : அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான யோசனையை ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளின் போது நிறைவேற்றிக் கொள்ள முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறைமா அதிபராக பணியாற்றுவதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரிடம் யோசனையை சமர்ப்பித்தல்
2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க அதிகாரிகளை பதவி நீக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய சட்டமா அதிபர் மற்றும் காவல்துறைமா அதிபரை பதவி நீக்கும் வழிமுறைகளையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. அதற்கமையவே காவல்துறைமா அதிபரை பதவி நீக்குவதற்கான யோசனையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 75க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு சபாநாயகரிடம் யோசனையை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கமைய 115 நாடாளுமன்ற உறுப்பினரால் கையெழுத்திடப்பட்ட யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக இந்த யோசனை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்படும். அதனையடுத்து 5 நாட்களின் பின்னர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படும்.
அதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நாளை அண்மித்த நாளில் அதாவது ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதி தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
நீதிமன்ற செயற்பாடுகள்
நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தராத உறுப்பினர்களும் உள்ளடங்கலாக 113 பேரது ஆதரவுடன் இந்த யோசனை நிறைவேற்றப்பட வேண்டும். அந்த வகையில் 113 வாக்குகளைப் பெற்றுக் கொள்வது அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் சிக்கலாகாது.
எனவே இதனை ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும். இவ்வாறு இந்த யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து மூவரடங்கிய ஒழுக்காற்று விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.
பிரதம நீதியரசரால் நியமிக்கப்படும் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையின் கீழ் காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்படும் நிர்வாக அறிவுடைய அதிகாரி ஆகியோர் நியமிக்கப்படுவர்.
இந்த விசாரணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பதவி நீக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து 113 அல்லது அதற்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை நிறைவேற்ற முடியும்.
இந்த நடைமுறையையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தின் இந்த நடைமுறை எந்த வகையிலும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையாது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
