அநுர அரசின் அதிரடி : தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை விரைவில்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத் (Jagath Wickramaratne) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தவறான நடத்தை, ஊழல், பதவி துஷ்பிரயோகம், கடமை தவறுதல் மற்றும் பாரபட்சம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 115 பேரின் கையொப்பத்துடன் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
அத்துடன் இந்த பிரேரணை இந்த மாதம் 8 ஆம் அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) முன்னதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை பதவி நீக்குதல் சட்டத்தின் பிரிவு 5 இன் படி விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாகவே தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதயிவில் இருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதம் இன்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

