யாழ் பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறை : ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர்களுக்கு எதிராக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அறிவுறுத்தியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதி ஒன்றில் வைத்து முதலாம் ஆண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகப் பொய் வாக்கு மூலங்களில் கையொப்பம் இடுமாறு மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் பணிக்கப்பட்டமை மற்றும் மாணவர்களின் சம்மதமின்றி காணொளி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இது தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து அறிக்கையிடுமாறும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகளில் இருந்து அம் மாணவர்களைப் பாதுகாக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அறிவுறுத்தியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் முறைப்பாடு
இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மேற்கொண்ட முறைப்பாடுகள் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், அதனடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல்களை மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் பகிடிவதைக்கு எதிரான விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
செய்திகள் - த. பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
