பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்து ஜனாதிபதி விடுத்த கோரிக்கை
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனை இன்று காலை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதாக உயர்ஸ்தானிகர் பதில் வழங்கினார்.
இதேவேளை வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கலந்துரையாடினார்.
இதற்கிடையில் கரிம உரங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதியின் முடிவை பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பாராட்டியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது
வனப்பகுதியை 20.8 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தும் இலங்கை அரசாங்கத்தின்
திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜெனிவா தீர்மானம் குறித்தும், நிலப் பிரச்சனைகள் மற்றும் ஏனைய விடயங்களை
தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும்
ஜனாதிபதி, பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு விளக்கினார்.