உடனடியாக வெளியேறவேண்டும்- ரணிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தனது கடந்த கால மகிமையை பெறவேண்டுமென விரும்பினால் கட்சியின் தற்போதைய இக்கட்டான நிலைக்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து உடன் விலகவேண்டும்.
இவ்வாறு கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கட்சித் தலைமைப்பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கு ஐ.தே. கவின் முன்னணி செயற்பாட்டாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸநாயக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கட்சியின் பொறுப்புக்களில் இருந்து விலகினாலும் ஒருபோதும் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
கட்சி அரசியலமைப்பை மீறி ரணில், அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார் எனத் தெரிவித்த அவர், சாகல ரத்நாயக்க மற்றும் தயா கமகே ஆகியோரும் ரணிலை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க விரும்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.