மன்னாரில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுமக்கள் காணிகள்! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும்,பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, “1990 ஆம் ஆண்டிலிருந்து மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

2010, 2011 மற்றும் 2012 காலப்பகுதிகளில் அவர்கள் மீண்டும் குடியேறினாலும், அவர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடுகள் இதுவரை முறையாக வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பழைய ஆவணங்களைக் கண்டறிவதில் சிரமங்கள் உள்ளன.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவான ஒரு நஷ்ட ஈட்டுத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
31,000 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 3,500 ஏக்கர் நிலத்தை பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சில நிலங்கள் ஏலம் விடப்பட்டு, பெரும் தொகை வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்து சட்ட ரீதியான விசாரணை நடத்த ஆளுநர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
பொதுமக்களின் காணி
மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, வரும் 25ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து நிலைமைகளை நேரில் ஆராய்வார்கள். இதன் மூலம் பொதுமக்கள் நிலங்களை அதிகபட்சமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள மிகவும் ஏழ்மையான மற்றும் முதியவர்களை கொண்ட குடும்பங்களுக்குத் குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை பெறுவதில் நிதிச் சிக்கல்கள் உள்ளன.
மாதக் கட்டணத்தைச் செலுத்த முடிந்தாலும், ஆரம்ப இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த அவர்களால் முடியவில்லை. இத்தகைய குடும்பங்களுக்குத் தற்போதைய அரசால் இலவசமாக நீர் மற்றும் மின்சார இணைப்புகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |