அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்திடம் சாட்சியமளிக்க தயார்! ஜெனிவாவில் சிறீதரன் பகிரங்கம்
சர்வதேசத்தின் தலையீட்டோடு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் முன்னின்று சாட்சியம் வழங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் சுவிஸர்லாந்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது கூட்டுத் தொடரில் கலந்துக் கொள்வதற்காக ஜெனீவா சென்று, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மீது குற்றம் புரிந்தவர்கள், இனப்படுகொலை செய்தவர்கள், சிங்கள ஆட்சியாளர்களே.
ஆக, தற்போதைய அரசாங்கமாக இருந்தாலும் சரி, இனி வரும் அரசாங்கங்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களின் நிலைமையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள்
தொடர்ந்தும் குரல் கொடுத்து நீதியை பெறுவதற்கான முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள், ஈழத்திலே இருக்கக்கூடிய தேசிய அமைப்புகள் இணைந்து ஒரு புள்ளியாக மேற்கொண்டால் மாத்திரமே இதற்கான ஒரு வெற்றியை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்கு பலத்துடன் கூடிய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
