11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் - சட்டமா அதிபரின் முடிவுக்கு எதிராக ரிட் மனு
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை எதிர்வரும் 29 ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக மேல்நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிராக கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையை வாபஸ்பெறுவதற்கு சட்டமா அதிபர் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி காணாமற் போனோரின் பெற்றோர்கள் நான்குபேர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதிவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்படி ரிட் மனு யோஹித்த ராஜகருணா, தம்மிக்க கலேபொல ஆகியோர் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.