டயகம சிறுமி உயிரிழப்பு விவகாரம்- ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு
டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்த வழக்கின் 5வது சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின்(Rizard Badurdeen) விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நுவரெலியா - டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான இஷாலினி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இதையடுத்து, அவர் உள்ளிட்ட அங்கு வேலைக்குச் சென்ற பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளிவந்தன.
இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை வெளியிட்ட நிலையில், ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.