நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ரோஹிங்கியா அகதிகள் : அரசாங்கத்தின் உதவியை நாடி ஆர்ப்பாட்டம் (காணொளி)
இலங்கையில் உள்ள ரோஹிங்கியா இன முஸ்லீம் அகதிகள் இன்று (2) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதை எதிர்த்து, அந்த அலுவலகத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைதி ஆர்ப்பாட்டம்
இதையடுத்து, குறித்த உயர்ஸ்தானிகராலயத்தின் சேவைகளை பெற்றுக் கொண்ட இலங்கை வாழ் ரோஹிங்கியா இன முஸ்லீம் அகதிகள், இன்று அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது, இந்த உயர்ஸ்தானிகராலயத்தால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தமது மாதாந்த கொடுப்பனவை நிறுத்த வேண்டாம், எம்மை இருளில் தள்ள வேண்டாம், எமக்கு அரசாங்கத்தின் ஆதரவு தேவை போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் தலையீடு
இந்த நிலையில், குறித்த ரோஹிங்கியா இன முஸ்லீம் அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட வேண்டுமென அவர்களுக்காக குரல் கொடுக்கும் சட்டத்தரணி சுரேன் டி பெரேரா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |