போக்குவரத்து சட்டத்தை மீறி ரணிலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்.பி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena), மோட்டார் போக்குவரத்து திணைக்கள (Department of Motor Traffic) சட்டம் மற்றும் வீதி போக்குவரத்து சட்டத்தை மீறி பதிவு செய்யப்படாத உயர் இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாகவும் அதனை அறிவிப்பதற்கான கூட்டத்துக்கே அவர் இந்த பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் சட்டம்
இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்கத்திலிருந்து அகற்றுவதற்கான தற்காலிக அனுமதி இல்லாதவரை வீதியில் பயணிக்க அனுமதிக்கப்படாது.
அதேநேரம் இலங்கையில் அதிக திறனுள்ள எஞ்சின்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்படவில்லை.
புதிய விதிமுறை
எனினும், நாட்டில் அதிக எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகளை ரோஹித அபேகுணவர்த்தன முன்மொழிந்துள்ளார்.
இலங்கையில் 450சீசீ இற்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட பல மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகவும், 450சீசீ இலிருந்து 1300சீசீ வரையிலான இயந்திரத் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் விசேட விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |