ரணிலின் பிரித்தானிய பயணத்துக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதி : உறுதிப்படுத்திய காவல்துறை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைதுக்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய பிரித்தானிய விஜயத்துக்கான நிதி, ஜனாதிபதி செயலகத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காலிங்க ஜயசிங்க (Kalinga Jayasinghe) தெரிவித்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவில் இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர், ரணில் விக்ரமசிங்க அவரது பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட சுமார் 10 பேருடன் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகதத்தின் நிதி
இதுவொரு உத்தியோகபூர்வ விஜயம் அல்லவென, ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் என்பவற்றுக்கு இடையில் பரிமாறப்பட்ட கடிதங்கள் ஊடாக நிரூபணமாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் இருநாள் பிரித்தானிய விஜயத்துக்கான செலவு மதிப்பீட்டுக்கமைய, அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் 44 ஆயிரத்து 445 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (ஒரு கோடியே 62 இலட்சத்து 70 ஆயிரத்து 572 ரூபா 83 சதம்) இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரப்பட்டிருந்தது.
இந்த நிதியானது, ஜனாதிபதியின் செயலகத்துக்கான ஒதுக்கத்திலிருந்து, வெளிவிவகார அமைச்சுக்கு வரவு வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிதியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது பாரியார் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரின் செலவுகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை
அவர்களது பயணச்சீட்டு செலவுகளை தவிர்ந்த தங்குமிடம் உள்ளிட்ட ஏனைய அனைத்து செலவுகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைவிட, ரணில் விக்ரமசிங்கவுடன் பிரித்தானியாவுக்கு பயணித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் கடற்படையின் வைத்தியரின் செலவுகளுக்காக மேலதிகமாக 32 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உள்ளக கணக்காய்வு அறிக்கைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதுதொடர்பில், காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கமைய, கடந்த வருட பிற்பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயம் உத்தியோகபூர்வமற்ற விடயம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அரச மரியாதைகள் இடம்பெறவில்லை
முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்துக்காக எந்தவித இராஜதந்திர அழைப்புகள் விடுக்கப்படவில்லை. அத்துடன், இராஜதந்திர விஜயத்தின்போது வழங்கப்படும் அரச மரியாதைகளும் இந்த விஜயத்தின்போது அங்கு உத்தியோகபூர்வ சந்திப்புகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை.
அதன்படி, இது ஒரு தனிப்பட்ட விஜயம் என விசாரணைகளில் தெரியவந்திருந்த நிலையில், அதற்காக அரசின் நிதி பயன்படுத்தப்பட்டமையும் கண்டறியப்பட்டது.
அதற்கமையவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1993 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து சட்டத்தின் 5 ஆவது பிரிவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்“ என காவல்துறை சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்