22.5 மில்லியன் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்...! இளைஞர் கைது
கிரிண்டிவல பகுதியில் ரூபாய் 22.5 மில்லியன் பெறுமதியான ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
கனேமுல்ல காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
போதைப்பொருளுடன் சேர்த்து சந்தேகநபர் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டிலிருந்து இரண்டு இலத்திரனியல் தராசுகள் மற்றும் இரண்டு கைபேசிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் கனேமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிரிண்டிவல - திக்கந்தவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீடு சோதனையிடப்பட்டது.

இந்தநிலையில் சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே கிரிண்டிவலவில் வீடொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது டுபாயில் (Dubai) தலைமறைவாக உள்ள மினுவாங்கொடையைச் சேர்ந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவராலேயே இந்த போதைப்பொருள் தனக்கு விநியோகிக்கப்பட்டதாக சந்தேகநபர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கிரிண்டிவல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |