380 மில்லியன் ரூபாய் மோசடி குறித்து தேசிய அபிவிருத்தி வங்கி விளக்கம்
உள்ளக பணியாளர்கள் வெளித் தரப்பினருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட மோசடிச் செயலை வங்கி கண்டறிந்ததைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் வைப்புத்தொகைகளும் செயற்பாடுகளும் பாதிக்கப்படாமல் உள்ளதாக தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையால் வாடிக்கையாளர் வைப்புத்தொகைகள், கணக்கு மீதிகள் அல்லது வங்கியின் அன்றாடச் செயற்பாடுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், அனைத்து நிதிகளும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளதாகவும், வணிகம் வழக்கம் போல் தொடர்வதாகவும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் உறுதியளிக்க விரும்புவதாக அந்த வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொழும்பு பங்குச் சந்தை
இந்த விவகாரம் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது உள்ளக மற்றும் வெளியக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வங்கி கூறியுள்ளது.

இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கைகளைத் தொடர அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் மேலதிக விவரங்கள் பகிரப்படும் என்றும் NDB வங்கி மேலும் கூறியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தைக்கு வங்கி முன்னதாக அளித்த ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.
அதில், சில ஊழியர்கள் மூன்றாம் தரப்பினருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஒரு மோசடியைக் கண்டறிந்ததாகவும், இதன் மூலம் சுமார் 380 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக முதற்கட்ட மதிப்பீடுகள் குறிப்பிடுவதாகவும் வங்கி தெரிவித்திருந்தது.
இறுதித் தொகை அதிகமாகலாம்
விசாரணைகளின் முடிவைப் பொறுத்து இறுதித் தொகை அதிகமாக இருக்கலாம் என்றும் வங்கி அப்போது குறிப்பிட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக NDB வங்கி மேலும் கூறியுள்ளதுடன், பொதுமக்கள் யூகங்களைத் தவிர்ப்பதையும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

விளக்கம் கோரும் வடிக்கையாளர்கள், துல்லியமான தகவல்களைப் பெற தங்களுக்கு அருகிலுள்ள NDB கிளை, அழைப்பு மையம் அல்லது உறவு முகாமையாளரைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையைப் பேணுவதில் தனது உறுதிப்பாட்டையும் NDB வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்