கோட்டாபயவின் அழைப்பை பற்றி பிடியுங்கள்- தமிழ் அரசியல்வாதிகளிடம் ஆளும்தரப்பு கோரிக்கை
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksha) விடுத்த அழைப்பை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென ஆளும்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dilan Perera) கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் வேறுபாடுகளை துறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரச தலைவர் விடுத்த அழைப்பினை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். அரச தலைவரின் சிம்மாசன உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த தீர்மானங்களை முன்னெடுத்துள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் பொதுவான பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம்.ஒரு சில தீர்மானங்கள் தவறாகியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.தவறுகளை திருத்திக் கொண்டு செயற்படுவது பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என்றார்.