சூடு பிடிக்கும் போர் நிறுத்த பேச்சு வார்த்தை : புடின் எடுத்த அதிரடி முடிவு
உக்ரைனுடனான (Ukraine) போர் நிறுத்தத்தை ரஷ்ய (russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (vladimir putin) ஏற்றுகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தீவிரம் காட்டி வருகின்றார்.
அதேவேளையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளுக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகின்றார்.
போர் நிறுத்தம்
இது தொடர்பாக கடந்த மாதம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கி வந்த இராணுவ உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா நிறுத்தியது.
இதையடுத்து, வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா-உக்ரைன் இடையே வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
கூட்டு அறிக்கை
பேச்சுவார்த்தை முடிந்த பின் அமெரிக்கா மற்றும் உக்ரைன் கூட்டு அறிக்கையை வெளியிட்டது.
அதில், “அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது.
இந்த போர் நிறுத்தக் காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம்.
இது ரஷ்ய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே அமலுக்கு வரும்” என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷ்யா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
அமெரிக்கா பேச்சுவார்த்தை
புடின் மற்றும் ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் போரை நிறுத்த ரஷ்யாவும் உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புடின் இதனை ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் தலையீட்டினால் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்