ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரும் நாட்களில் புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு தொடர்பான சிக்கலைத் தீர்க்க உதவுவதாக ரஷ்யா மீண்டும் முன்வந்துள்ளது.
இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஈரானின் அமைதி வழி செறிவூட்டல் உரிமையைப் பாதிக்காத வகையில், அந்நாட்டிடம் உள்ள அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக மாற்றவோ அல்லது பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவோ ரஷ்யா உதவத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை
அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முன்னோடியாகக் கருதப்படும் ஈரானின் இந்த யுரேனியம் இருப்புதான், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் பெரும் தடையாக இருந்து வருகிறது.

ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் சுமார் 460 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் போது, செறிவூட்டல் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்த போதிலும், இந்த தற்காலிக இடைநிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பங்கு
செறிவூட்டல் பணிகளைப் பகுதி அளவோ அல்லது தற்காலிகமாகவோ நிறுத்தாமல், முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

Image Credit: PBS
முன்னதாக ஒபாமா ஆட்சிக் காலத்தில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையாள்வதில் ரஷ்யா முக்கியப் பங்காற்றியது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் யுரேனியம் தொடர்பாக ஈரான் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ரஷ்யா ஏற்கும் என்று லாவ்ரோவ் கூறியுள்ள அதேவேளை, மின் உற்பத்தி போன்ற அமைதி வழித் தேவைகளுக்காக மட்டுமே தாங்கள் யுரேனியத்தைச் செறிவூட்டுவதாகத் தெரிவிக்கும் ஈரானின் நிலைப்பாட்டையே ரஷ்யாவும் ஆதரிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |