புத்தாண்டில் உக்ரைன் மீது கோரத் தாக்குதல்..! ரஸ்யாவின் கொடூர திட்டம்
தாக்குதல்
ரஸ்யா அண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்தபோதும், புத்தாண்டின் ஆரம்பத்திலேயே அந்த நாடு பரந்த அளவு தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
உக்ரைனின் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியம், தெற்கு அல்லது தலைநகர் கீவ் மீதே இந்தத் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று மூத்த இராணுவ ஜெனரல்கள் எச்சரித்துள்ளனர்.
தரை வழி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான ரஸ்யாவின் திறன் குறைந்து வருவதாக மேற்கத்திய தரப்புகள் கூறி வருகின்றன.
பரந்த தாக்குதல்
இந்தப் போர் ரஷ்யாவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த நாடு வெடிபொருட்களின் தீவிர பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாகவும் பிரிட்டனின் மூத்த இராணுவ அதிகாரியான அட்மிரல் சேர் டோனி ரடாகின் இந்த வாரம் கூறியிருந்தார்.
இந்நிலையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ ஊடகத்திடம் பேசும்போது, போர்க்களத்தில் பெரும் இழப்புகளை சந்திக்கும் நிலையில் பரந்த தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்காக இணைக்கப்பட்ட 300,000 துருப்புகளில் பாதிப் பேர் தமது பயிற்சிகளை பூர்த்தி செய்யும் நிலையில் இந்த தாக்குதல் வரும் பெப்ரவரியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
“சுமார் 150,000 ஆக உள்ள அணிதிரட்டப்பட்ட படையினரில் இரண்டாவது பகுதியினர் தயார் நிலைக்கு குறைந்தது மூன்று மாதங்களை எடுத்துக் கொள்ள முடியும்.
இதன்படி கடந்த ஆண்டைப் போன்று வரும் பெப்வரியில் இரண்டாவது அலை தாக்குதலுக்கு முயற்சிக்கக் கூடும். அது தான் அவர்களின் திட்டம்” என்று ரெஸ்னிகோ, கார்டியன் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

