ஐரோப்பாவுடன் போருக்கு ரஷ்யா தயார்: புடின் தெரிவிப்பு
ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் ரஷ்யா ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
எனினும், ஐரோப்பாவுடன் போர் ஏற்படுமானால் அதனை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அத்தகைய போரைத் தாம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோர்வே மற்றும் பின்லாந்து தலைவர்களுடனான தொலைபேசி உரையாடல்களைத் தொடர்ந்து புடின் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இராஜதந்திரப் பதற்றங்கள்
ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரப் பதற்றங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்து மோதலாக மாறினால், எந்தவொரு தரப்பாலும் வெற்றிபெற முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் மோதல்களைப் போன்றதொரு சூழலை பால்டிக் பிராந்தியம் எதிர்கொள்வதை மாஸ்கோ விரும்பவில்லை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும், ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மீண்டும் சீரமைக்கவும் ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பால்டிக் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |