பூதாகரமாக வெடித்த ரஷ்ய விமான தடை! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு
ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் புறப்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை நீக்குமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, குறித்த தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
தடை விதிக்கப்பட்டமைக்கான பின்புலம்
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின் பிரகாரம், ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது.
அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாடொன்றினை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அம்மனுவின் முதல் பிரதிவாதியான ஏரோபுளொட் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு கடந்த 2 ஆம் திகதி தடையுத்தரவொன்றினை பிறப்பித்தது.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330 விமானத்திற்கு நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க உத்தரவிட்டிருந்தார்.