உக்ரைன் அதிபரை கொல்லும் ரஷ்ய சதி முறியடிப்பு :இரண்டு இராணுவ உயரதிகாரிகள் கைது
உக்ரைனிய பாதுகாப்பு சேவை (SBU) அதிபர் வெலோடிமீர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) மற்றும் பிற உயர்மட்ட உக்ரைனிய அதிகாரிகளை படுகொலை செய்வதற்கான ரஷ்ய சதியை முறியடித்ததாக தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சதி முயற்சிக்கு உடந்தையாக இருந்த உக்ரைன் அரசாங்க பாதுகாப்பு பிரிவு கேணல்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்ய பாதுகாப்பு சேவைக்கு (FSB) சொந்தமான முகவர்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை கூறியது.
இரண்டு அதிகாரிகள் கைது
அதிபரை தவிர மற்ற இலக்குகளில் இராணுவ உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ்(Kyrylo Budanov) மற்றும் உக்ரைனிய பாதுகாப்பு சேவை (SBU) தலைவர் வாசில் மாலியுக்(Vasyl Malyuk) ஆகியோர் அடங்குவர்.
இந்த ஆண்டு மே 5 ஆம் திகதி வரும் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டருக்கு முன்பு புடானோவை கொல்ல குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் ஏற்கனவே ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வாங்கியுள்ளார் என்று உக்ரைனிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
ஆயுதங்கள் கண்டெடுப்பு
செவ்வாயன்று ஐந்தாவது முறையாக பதவியேற்ற ரஷ்ய அதிபர் புடினுக்கு இந்த கொலை செய்தி பரிசாக இருந்திருக்க வேண்டுமென உக்ரைனிய பாதுகாப்பு சேவை தலைவர் மால்யுக்(Vasyl Malyuk) தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ரஷ்ய சிறப்பு சேவைகளின் தோல்வியாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார். "ஆனால் நாம் மறந்துவிடக் கூடாது - எதிரி வலிமையானவர் மற்றும் அனுபவம் வாய்ந்தவர், அவரை குறைத்து மதிப்பிட முடியாது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த மாதம், ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய உளவுத்துறை சேவைகளுடன் ஒத்துழைக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு போலந்து நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |