கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் - இடைக்கால அரசு அமைக்க இணங்கியது பொதுஜன பெரமுன
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அண்மையில் சுயேட்சையாக செயற்படப்போவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் நாளை (2) காலை அரச தலைவர் மாளிகையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அண்மையில் அரசாங்கத்தில் இருந்து சுயேட்சையாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இடைக்கால அரசாங்கம் தொடர்பான பிரேரணையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் இந்த பிரேரணை நாளையதினம் கலந்துரையாடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்த குழு ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் குறித்த பிரேரணையை கையளித்துள்ளது.
இடைக்கால அரசாங்கம் அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவிப்பதாகவும், இடைக்கால அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களில் இருந்து மாத்திரம் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதனால் எவ்வித பலனும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 29ஆம் திகதி அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
