தமிழர் தரப்பை நாடியுள்ள சஜித்: ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்த நகர்வு
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் அழைப்பில் எதிர்க்கட்சித் தலைவரது அலுலகத்தில் இன்று காலை7.30 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதம அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷும் கலந்து கொண்டனர்.
சந்திப்பதற்கான அழைப்பு
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளர் களமிறங்கியுள்ள நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக சஜித் பிரேமதாச பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.
இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் சஜித் பிரேமதாச தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்தனர்.
அரசியல் தீர்வு
இச் சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் எட்டப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு வலுப்பெற்றது என்பது தெளிவு படுத்தப்பட்டது.
இந்த நிலையில், எதிர்கட்சி தலைவரின் கருத்துக்களை பரிசீலித்து மற்றவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்துவதாக தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |