ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் சஜித் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிரான்ஸ் (Marc-André Franche) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.
இச்சந்திப்பு நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமித்தமே இச்சந்திப்பு இடம் பெற்றது.
அரசியல் நிலைமைகள்
இந்நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு தெரியப்படுத்தினார்.
அவ்வாறே, தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் அவர் மேலும் எடுத்துரைத்துள்ளார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளாக ஆசம் பக்கீர் மாக்கார் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி(Azam Bakeer Makar), (Development Coordination Officer), தாரக ஹெட்டியாராச்சி சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் (Tharaka Hettiarachchi), (Peace Window Coordinator) உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

