ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிகளிடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்சார் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க சிறிலங்கா அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார்.
எனினும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிட வேண்டாம் என்றும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவுக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைத் தொடர்ந்து வழங்குவது குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக விஜயம் செய்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று முன்தினம் முதல் தமது மதிப்பீட்டுப்பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகள் குழு சிறிலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை நேற்றுமாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.
இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்கிவிட வேண்டாம் என்ற கோரிக்கையை சஜித் பிரேமதாஸ முன்வைத்திருக்கின்றார்.
மாறாக இந்த வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்சார் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை சிறிலங்காவுக்கு வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் சஜித் அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனநாயகம், மனித உரிமைகள், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்பு குறித்தும் நினைவுகூரப்பட்டது.