நுவரெலியா மாவட்டத்தில் சஜித்தை வெற்றிபெற வைப்போம்: இராதாகிருஷ்ணன் எம்.பி சூளுரை
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நுவரெலியா - தலவாக்கலையில் இன்று (08.09.2024) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், எமது நாட்டில் இதுவரை எட்டு ஜனாதிபதிகள் உருவாகியுள்ளனர். அவர்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கையே இருந்துள்ளது. தான் சிங்கள, பௌத்த வாக்குகளால் தான் ஆட்சிக்கு வந்ததாக ஒருவர் கூறினார். தமிழர்களையும் அரவணைத்துக்கொண்டே பயணிக்க வேண்டும் என மற்றுமொருவர் கூறினார்.
மாறுபட்ட நிலைப்பாடுகள்
இப்படி மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன. ஆனால் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச தான். இதனை நாட்டு மக்களும் நிச்சயம் உணர வேண்டும்.
ஒரு சிலர் வடக்குக்கு சென்றால் ஒரு விடயத்தையும், தெற்கில் மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றனர். ஆனால் அனைத்து பகுதிகளிலும் செய்யக்கூடிய விடயங்களை சொல்லும் தலைவராக சஜித் காணப்படுகின்றார். அனைத்து இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய தலைவராகவும் அவர் உள்ளார்.
அதன் அடிப்படையிலேயே நாம் சஜித்தை ஆதரித்தோம். சஜித்தை நாம் வெறுமனே ஆமாம் சாமி போட்டு ஆதரிக்கவில்லை.47 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரஜாவுரிமை
இவற்றை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். லயன்களை வெறுமனே கிராமங்களாக மாற்றுவதில் தீர்வு கிட்டப்போவதில்லை.
சஜித் ஆட்சியில் மலையகத்தில் நாம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களை அச்சுறுத்தி வாக்கு பெறும் முயற்சியில் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஈடுபட்டு வருகின்றார். சஜித்தைவிடவும் அநுர முன்னிலையில் இருக்கின்றார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கூறுகின்றார்.
அநுரவை வெற்றிபெற வைப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) தான் எமது மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கினார் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |