ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு - டெங்கு ஒழிப்பு உதவியாளர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில் சஜித் கேள்வி
டெங்கு ஒழிப்பு உதவியாளர்களை நிரந்தரமாக்கல் தொடர்பில் இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு தாம் கொண்டு வந்த போது அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியிருந்தாலும் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
ஏன் இவர்களை நிரந்தரமாக்க முடியவில்லை
ஜூன் 20 ஆம் திகதி இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், இச்சேவையில் ஈடுபட்டுள்ள 1105 பேர்களுக்கும் நாளாந்தம் 733 ரூபா சொற்ப சம்பளத்தையே பெறுவதாகவும் 31 ஆயிரம் பல்சேவை ஊழியர்களை பணியில் நிரந்தரமாக்க முடியும் போது ஏன் இவர்களை நிரந்தரமாக்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் பல சாதாரண நியமனங்களை வழங்கியிருந்தாலும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலின் கீழ் அவர்கள் வேலையில் இருந்து தரமிறக்கப்பட்டனர் என்றும் அவ்வாறானதொரு இரட்டைக் கொள்கையா இப்போதும் பின்பற்றப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.