போராட்டத்தில் குதித்துள்ள சுகாதார சேவையினர் : ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு
புதிய இணைப்பு
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வவுனியாவில் 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளின் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார உத்தியோகத்தர்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் வவுனியாவிலும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதன் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டிகொல்லாவ, பதவியா, உட்பட தூர இடங்களில் இருந்து வரும் 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் உட்பட மொத்தமாக 1,000 பேர் வரை நாளாந்தம் மருத்துவ தேவைக்காக வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
2025 வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால் 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
அந்தவகையில் இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் மூதூர் வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவமாதுக்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதார மருத்துவமாது அலுவலகங்கள் மூடப்பட்டு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
சாதாரண பொதுமக்கள் பாதிப்பு
தொழிற்சங்கங்கள் அரசியல் பின்புலத்தில் தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதால் சாதாரண பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.
சுகாதார சேவை பெறுவதற்கு கஷ்டங்களுக்கு மத்தியில் வந்தாலும் சேவை பெறாது திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று (18.03.2025) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தை சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன அறிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம் நியாயமற்றது
இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் தமது பிரச்சினை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்தப் வேலைநிறுத்தம் நியாயமற்றது என இணை சுகாதார நிபுணர்களின் கூட்டு அதிகார சபையின் இணை அழைப்பாளர் சலித் அமரதிவாகர தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்