இலங்கை மீதான நம்பிக்கையை மியான்மார் மக்கள் இழந்துள்ளனர்!
மியன்மார் மக்கள் இலங்கை மீது நீண்ட காலமாகக் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உப தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு மியன்மாருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமையால், சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு - எதுல் கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மியன்மாரில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடம்பெறுகின்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் நிராகரித்துள்ளதோடு, அவற்றுக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் வீதிக்கிறங்கி போராடிய நிராயுதபாணியான பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து இராணுவ ஆட்சியை ஏற்றுக் கொண்டுள்ளதால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
மியன்மார் மக்களுக்கு இலங்கை மீது காணப்பட்ட நீண்ட கால ஸ்திர நம்பிக்கை அற்றுப்போயுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் இராஜதந்திர கொள்கைகளிலுள்ள குறைபாடுகளும் தெளிவாகியுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.